Home / த.மா.கா செய்திகள் / நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
Fresa XPress

நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்திய பாஜக அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 70 வருடங்களை கடந்த பிறகும் நரிக்குறவர்கள் இன்னும் குடியிருக்க வீடில்லாமல், பொருளாதார வசதியின்றி, கல்வி கற்க முடியாமல், வேலை வாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரத்திற்காக நாடோடிகளாக சுற்றித்திரிகின்ற நிலையைப் பார்க்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது.

gk-wasan-1

 தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் நரிக்குறவ இன மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

குறிப்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2014 இல் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவானது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நிறைவேற்றப்படவில்லை.

நான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு முன்பும், இடம் பெற்றிருந்த போதும், இன்றும் நரிக்குறவ இன மக்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். குறிப்பாக தமாகா உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் நரிக்குறவ இன மக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வருகின்ற பாஜக, நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நிலையை எடுக்க தவறிவிட்டது பாஜக. எனவே தமிழக அரசும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசிடம் நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்த வேண்டும்.

எனவே மத்திய பாஜக அரசு நடைபெறுகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி நரிக்குறவ இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களும் கல்வி கற்று, வேலை வாய்ப்பு பெற்று, சமுதாயத்தில் முன்னேற்றம் கண்டு நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …