Tuesday , November 19 2019
Home / த.மா.கா செய்திகள் / பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும்:
Fresa XPress

பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும்:

தமிழக அரசு தாய்மொழி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஆதரித்து, பாதுகாக்க செயல்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் மருத்துவமும், அதன் வரலாறும் மறைக்கப்படாமல் அனைவரும் அறிவதற்கும், அதன் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் சித்த மருத்துவ முறைகளால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத வகையில் உடல் ரீதியான பலம் ஏற்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு மருத்துவ முறைகளில் மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல் துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.

உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும், தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம்.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மரபு வழியாக இயங்கி வரும் சித்தா உள்ளிட்ட பல்வேறு மரபு வழி மருத்துவங்களை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவர்களை மாநில அளவில் முழுமையாகக் கணக்கெடுத்து தேவையான பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றினை வழங்கிட முன்வர வேண்டும்.

மேலும் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருந்துகளை கொண்டு நல்வாழ்வு மையங்களை இயக்குவதற்கு உதவிட வேண்டும். சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். சித்த மருத்துவ முறைக்கு பயன்படும் அரிதான மூலிகைகளை பாதுகாத்து, பயன்படுத்துவதற்கு ஏதுவாக தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை மூலம் விதைகள் மற்றும் மூலிகைச் செடிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்வமுள்ள பாரம்பரிய மருத்துவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் நிலங்களை குத்தகைக்கு கொடுத்து உதவிட வேண்டும். மாநிலம் முழுவதும் போலியாக மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாக இருந்த சித்த மருத்துவம் தற்போது இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே அப்பாடத்தினை மீண்டும் துவக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நலச்சங்கம் தமிழக அரசுக்கு மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். அவற்றையெல்லாம் தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு நிறைவேற்றித்தர முன்வர வேண்டும்.

மேலும் சித்த மருத்துவம் உள்ளிட்ட நமது பாரம்பரியமான, மரபு வழியான மருத்துவ முறைகளால் தீராத பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கு வழி இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப சிறப்பு கவனம் செலுத்தி, பாரம்பரிய, மரபு வழி மருத்துவ முறைகளை பாதுகாத்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை” என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …