myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Monday , November 19 2018
Home / அனல் மின் நிலையம் / ஜிகே வாசன் புகார்
Fresa Technologies

ஜிகே வாசன் புகார்

எண்ணூரில் புதிய நவீன முறை அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளில் மெத்தனம் ஏற்பட்டுள்ளதாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜிகே வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் 1970-ல் மின் உற்பத்தி தேவைக்காக சென்னை, எண்ணூரில் அனல்மின் நிலையம் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையத்தின் முழு திறன் சுமார் 450 மெகாவாட் ஆகும். இதற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பராமரித்தல், மேம்படுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த அனல்மின் நிலைய வளாகத்தில் புதிய அனல்மின் நிலையம் அமைக்க சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2014-ல் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பணிகள் மெத்தனமாகவே நடைபெற்று வந்தன. ஆனாலும் நவீன முறையில் அமைக்கப்படும் என எதிர்பார்த்திருந்த அனல்மின் நிலையப் பணிகள் ஜூன், 2017 முதல் படிப்படியாக முடங்க ஆரம்பித்தது. இப்படி படிப்படியாக முடங்கிப்போன பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு முற்றிலும் முடக்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் அனல்மின் நிலையப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதே தமிழக அரசு அதனை சரிவர கண்காணிக்க தொடங்கியிருக்க வேண்டும்.

முக்கியமாக இந்த அனல்மின் நிலையம் அமைக்க வாங்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் மின் உற்பத்திக்காக செலவு செய்தும் அதன் பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கெல்லாம் முழு பொறுப்பு தமிழக அரசு தான். அது மட்டுமல்ல இந்த மிக முக்கியப் பணிக்கு திறமை மிக்க நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்திருக்க வேண்டும் என்று மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படியே ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்திருந்தாலும் அதன் பணிகளை தொடர்ந்து முறையாக கண்காணித்து, ஆரம்பத்திலேயே இதற்குண்டான மாற்று முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக எண்ணூர் அனல்மின் நிலையத்தில் புதிய நவீன முறையிலான அனல்மின் நிலையத்தை அமைக்கும் பணிகளில் சுமார் 20 சதவீத பணிகளே நடைபெற்றுள்ளதாகவும், இப்பணிகளில் ஈடுபட்ட வேலையாட்கள் தற்போது பணியின்றி மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக அரசு எண்ணூர் அனல்மின் நிலையப் பணிகளை மீண்டும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுத்திடவும், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வீணாக்காமல் இருப்பதற்கும், தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்திடவும், மின் உற்பத்திக்கு வழி வகைச் செய்திடவும் முன்வர வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Bitnami