2016 – 17 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

2016 – 17 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

மத்திய ரயில்வேதுறை அமைச்சர் 2016-17 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை இந்த மாதம் இறுதியில் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்திய ரயில்வேயில் சுமார் 13 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ரயிலில் தினமும் சுமார் 2 கோடியே 30 இலட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். எனவே ரயில்வேதுறை பொது மக்களின் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி ரயில்வே பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.

எனவே மத்திய ரயில்வேதுறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்திடும் வகையிலும், அதேபோல பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கும் வகையிலும், பயணிகள் மற்றும் சரக்குகள் கட்டணத்தை உயர்த்தாமலும், ரயில்வேயில் வருமானத்தைப் பெருக்க விளம்பரங்கள் போன்ற உத்திகளை கையாளும் விதமாகவும் அறிவிப்புக்களை வரும் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற செய்ய வேண்டும்.

மேலும் ரயில் பயணிகளின் சுகாதாரத்திற்கும், போதிய மருத்துவ வசதிக்கும், தேவையான குடிநீர் வசதிக்கும், ரயில் பெட்டிகளையும், ரயில் நிலையங்களையும் சுத்தமாகப் பராமரிப்பதற்கும், பயோ டாய்லெட் வசதி செய்து கொடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளான 7 வது சம்பளக் கமிஷனில் ரயில்வே தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள பரிந்துரைகளை மாற்றி அமைக்கவும், ரயில்வேயை தனியார் மயமாக்ககூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து சமூகப் பாதுகாப்புடன் கூடிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வகையிலும் ரயில்வே பட்ஜெட் அமைய வேண்டும்.

ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பிற்கும், ரயில் விபத்துக்களை தவிர்ப்பதற்கான புதிய உத்திகளை கையாளும் விதமான அறிவிப்புக்களையும் வரும் பட்ஜெட்டில் இடம் பெற செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.